தலைமை நிருபர் ஜனனி
சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் பதவி ஏற்பு....
தமிழ்நாடு டிஜிபியாக உள்ள திரிபாதி இன்றுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் .
சைலேந்திபாபுவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.தமிழ்நாட்டில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது.இந்நிலையில், யுபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்து வந்த பாதைகள் ...
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.மாவட்ட எஸ்.பி தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய அவர், செங்கல்பட்டு , திண்டுக்கல்,கடலூர் காஞ்சிபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றினார். பின்னர், சென்னை அடையாறில் துணை ஆணையராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்ற அவர், சென்னையில் இணை ஆணையராகவும் பணியாற்றினார்.கோவை காவல்துறை ஆணையர்கோவை காவல் ஆணையராக 2010 -11 ஆண்டுகளில் பணியாற்றிய போது, பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி இருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது, கோவை கொடிசீயா மைதானத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடைபெற செய்தது என சிறப்பாக செயல்பட்டுள்ளார்.சிறைத்துறைவடக்கு மண்டல ஐஜி ஆகவும் பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என தான் பணி புரிந்த துறைகளிள் எல்லாம் தடம் பதித்தார். சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். நன்னடத்தையுடன் சிறையில் இருந்த 700க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க பரிந்துரை செய்தார்.பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில்தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது, அந்த சம்பவத்தில் மீட்பு பணியில் சைலேந்திரபாபு கடலோர காவல் படையினருடன் இணைந்து முக்கிய பணியாற்றினார். இதேபோன்று தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக இருந்த காலகட்டத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றிய பணியும் குறிப்பிடத்தக்கது.நம்பிக்கை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றுதல் என பல்துறை வித்தகரான இவர் நீங்களும் ஐ.பி.எஸ். ஆகலாம், சாதிக்க ஆசைப்படு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.1000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்சைக்கிள் ஓட்டுதலில் பெரும் ஆர்வம் கொண்டவர். 500 கி.மீ. 1000 கி.மீ.கள் என இவர் சைக்கிள் ஓட்டுவதோடு அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு மற்றவர்களுக்கும் உந்து சக்தியாக செயல்பட்டவர்.
வாங்கிய விருதுகள்....
காவல்துறையில் இவர் ஆற்றிய பணிகளை மெச்சும் வகையில், சிறப்பாக கடமையாற்றியமைக்கான குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதமர் விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவி ஏற்ற சைலேந்திரபாபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அனைவருடனும் சேர்ந்து சுமைதாங்கி இதழ் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.